Monday, June 28, 2010

டென்னிஸ் வரலாற்றில் புதிய சாதனை 11 மணி நேரம் நடந்த ஆட்டம்

டென்னிசில் இஸ்னர்-மகுத் இடையிலான ஆட்டம் 11 மணி நேரம் நடந்து புதிய சாதனையை கண்டுள்ளது.

வரலாறு படைத்த ஆட்டம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னரும், 148-ம் நிலை வீரர் பிரான்சின் நிகோலஸ் மகுத்தும் மோதினார்கள். இருவரும் தலா 2 செட்டை தங்கள் வசப்படுத்திய நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட்டில் கடுமையான போராட்டம் காணப்பட்டது. விடாகண்டன்-கொடாகண்டன் போல் இருவரும் சளைக்காமல் மல்லுகட்டினார்கள்.




இதனால் இந்த செட் அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போனது. கடைசி செட் 59-59 என்று இருந்த போது, அன்றைய தினம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மொத்தம் 10 மணி நேரம் நடந்தும் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. நூற்றாண்டுக்கு மேலான டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு நேரம் எந்த ஆட்டமும் நீடித்ததில்லை. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் பேப்ரிஸ் சாண்ட்ரோ-கிளைமென்ட் இடையிலான ஆட்டம் 6 மணி 33 நிமிடங்கள் நடந்ததே அதிக நேர போட்டியாக இருந்தது.

இஸ்னர் வெற்றி

இந்த நிலையில் இஸ்னர்-மகுத் இடையிலான யுத்தம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. அப்போதும் முதல் ஒரு மணி நேரம் இருவரும் தங்களது சர்வீஸ்களில் மட்டும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். கடைசியில் இஸ்னர், மகுத்தின் சர்வீசை முறியடித்து, இந்த நீண்ட நேர போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மொத்தம் 11 மணி 5 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் 25 வயதான இஸ்னர் 6-4, 3-6, 6-7 (7), 7-6 (3), 70-68 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதில் கடைசி செட் மட்டும் 8 மணி 11 நிமிடங்கள் நீடித்தது. மீண்டும் ஒரு போன்று ஒரு ஆட்டம் நடக்காது என்று இஸ்னர் குறிப்பிட்டார்.

இந்த ஆட்டத்தில் இஸ்னர் 112 ஏஸ் சர்வீஸ்களும், மகுத் 103 ஏஸ் சர்வீஸ்களும் போட்டனர். இதுவும் புதிய சாதனையாக பதிவானது. 2009-ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக குரூப் அரைஇறுதி சுற்றில் குரோஷியாவின் கார்லோவிச் 78 ஏஸ்கள் விளாசியதே இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச ஏஸ் சர்வீசாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




போட்டி  வீடியோ பார்க்க

No comments:

Post a Comment