Sunday, July 4, 2010
உடற்பயிற்சி செய்வோம்...
நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தைப் பெறுவது இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. சத்தில்லா உணவு, சுகாதாரமற்ற வாழ்விடம் எனப் பல்வேறு காரணங்களுக்கிடையே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சிப் புறக்கணிப்பும் முக்கியக் காரணம்.
"வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க ஒரு மருந்து சொல்லுங்கள்' என்றால் உடனே உடற்பயிற்சி என்று சொல்லி விடலாம். ஆனால், கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம் என்பதைப் போல நோய்களின் ஆதிக்கம் உடலில் அரங்கேறிய பின்புதான் கசக்கும் மருந்துகளுடன், வியர்க்கும் உடற்பயிற்சியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்புகிறார்கள் பலர்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஏனென்றால், எந்திரங்களின் பயன்பாடு குறைந்திருந்த அந்தக் காலத்தில் தொழில் முதல் விவசாயம் வரை அனைத்துக்கும் உடல் உழைப்பே பிரதானம். உணவுக்காக உழைக்கும்போதே உடற்பயிற்சியும் கிடைக்கப்பெற்று ஆரோக்கியம் பெருகியது. ஆறுகளின் தேன்சுவை நீருக்கும், தென்றல் உறவாடும் காற்றுக்கும் இப்போதைய நகரங்களில்கூட அன்று தட்டுப்பாடில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் எந்த வேலையையும் முடிக்க முடியாது என்பதால் உடலும் அதற்கேற்ப வளைக்கப்பட்டது.
இதனுடன் "வீரம்' என்னும் போதையூட்டி இளைஞர்களுக்கு சிலம்பம், வாள்வீச்சு போன்ற வழிகளிலும் உடல் மேலும் வலுவூட்டப்பட்டது. சில பகுதிகளில் பல கிலோ எடை கொண்ட "திருமண கல்'என்ற கல்லை தூக்கிப் போட்டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் கூட இருந்தது. காலத்தின் வேகத்தில் அறிவியல் கடவுளின் வரத்தால் ஏராளமான இயந்திரங்கள் பெருகி விட்டன. இன்று படுக்கையில் இருந்தபடியே வீட்டுக் கதவுகளை "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் திறந்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடற்பயிற்சி வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டது.
கணினியோடு உறவாடி உழைக்கும் இன்றைய பல இளைஞர்களின் கைகள் கூட மகளிரைப் போல மென்மையாகிவிட்டது என்பதே உண்மை. கருப்பட்டியையும், கம்பஞ்சோற்றையும் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணவுப் பொருளாகப் புறந்தள்ளிவிட்டு, துரித உணவுகளால் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் இளைஞர்களை உடல் பருமனும், நோய்களும் எட்டிப்பிடிப்பது எளிதாகி வருகிறது. இராணுவம், பொலிஸ் போன்ற பணிகளுக்குச் சென்றால் மட்டுமே கட்டான உடல்வாகு தேவை என்பதும், படிப்பு, பணிகளுக்காக உடற்பயிற்சியை மறப்பதும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பொலிவான முகத் தோற்றத்துக்காக பலவித "க்ரீம்'களை வாங்க பணத்தில் தாராளம் காட்டும் வேளையில், உடலை மிடுக்காக்கி ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும் உடற்பயிற்சிகளுக்காகச் செலவிட மட்டும் தயக்கம் காட்டுவது தவறானதாகும்.
இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வளிக்கும் போக்கு உகந்ததல்ல. உடற்பயிற்சியின் உன்னதத்தை சிறுவயது வகுப்புகளிலேயே அறிந்திருந்தும் அதன்பக்கம் புறமுதுகிடுவதால்தான் ஆரோக்கியத்துக்காக மருந்தகங்களில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைக் கல்வி வரை வாரத்தில் ஒருசில மணி நேரம் மட்டுமே விளையாட்டுப் பாடவேளையாக உள்ளது. இந்நேரத்திலும் சில ஆசிரியர்கள் தமது பாடத்தைப் படிக்க ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதும் உண்டு. அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு விளையாட்டு அணியில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று வற்புறுத்தல் இல்லை. இதனால் விளையாட்டுப் பாடவேளையை வெட்டிக்கதை நேரமாக மைதானத்தில் மண்ணில் கோலமிட்டு கழிக்கும் மாணவர்கள் ஏராளம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியைக் கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் மாலை இறுதி பாடவேளையை விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் சிலம்பம், அந்நிய நாட்டு வரவான கராத்தே உட்பட உடற்பயிற்சியோடு தொடர்புடைய வீர விளையாட்டுகளைச் சேர்ப்பது தவறில்லை. அரசுப் பணிகளில் சேருவதற்கு விளையாட்டுச் சான்றிதழ்களின் அவசியத்தை அதிகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட சுகாதாரத் துறையினர் புதிய யுக்திகளை சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதற்கு உடற்பயிற்சி சாதனங்கள் கட்டாயம் என்று அவசியமில்லை. குறிப்பிட்ட துரம் ஓடுவது, குறிப்பிட்டளவு குனிந்து எழுவது என்று எத்தனையோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் குரைந்தது ஒரு சிலதையாவது செய்வதன் மூலம் உடலை கட்டமைப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கியமாக வாழலாம்.
உடற்பயிற்சி அவசியம்.....
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்
நோய் வருமுன் காப்போம்..
உங்கள் கருத்துக்களையும்பகிரவும்
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
nice article....
ReplyDeletethnks faaique
ReplyDelete